Friday, January 11, 2013

காதல்

காதல்- பிரெஞ்சு எழுத்தாளார் மப்பாசனின் சிறுகதை

சமீபத்தில் ஒரு நாளிதழில் துயரமான காதல் செய்தி ஒன்றை படிக்க நேர்ந்தேன். ஒருவன் ஒரு பெண்ணை கொலைசெய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டான். அவன் அவளை காதலித்திருக்க வேண்டும். அவன் யார்?அவள் யார்? எவ்விடத்தை சேர்ந்தவர்கள் என அறிந்து கொள்ள பெரிதாக ஆர்வம் ஒன்றும் எழவில்லை. ஆனால் அவர்களின் காதல் ஏனோ என்னை கவர்ந்தது. அந்த சம்பவம் என்னை துயரத்திலோ , வியப்பிலோ ஆழ்த்தவில்லை. ஆனால் என் கவனத்தை கலைத்தது, ஏனோ என்னை நெகிழ வைத்தது,. இளமை வயது நினைவினை ஞாபகமூட்டியது. ஆதி கிறிஸ்தவர்கள் முதன் முதலில் சிலுவையை கண்டுகொண்ட போது அடைந்த பரவச உணர்வினை போல, ஒருமுறை வேட்டையாட சென்ற போது, நான் காதலெனும் உணர்வை பூவுலக சொர்கத்தின் நடுவிலே முதன் முதலாக அறிய நேர்ந்த ஒரு விசித்திரமான சம்பவத்தை நினைவுபடுத்துகிறது.

நீங்கள் காலாற உலாவ செல்கையில், பதட்டத்துடன் உங்களை கடந்து செல்லும் ஒரு மனிதனுக்குரிய உணர்வுகளுடனும், உந்துதல்களுடனும்தான் பிறந்து வளர்ந்தேன். நண்பர்களின் ஆரவார வெற்று வாதங்களால் உள்ளூர எரிச்சலடைந்தாலும், அதனை அங்கு வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்தும் அளவிற்கு பக்குவமுடையவன். வேட்டையாடுதலில் அலாதியான ஆர்வம் உள்ள என்னை, துப்பாக்கி குண்டால் காயம்பட்ட ஒரு விலங்கையோ, சிறகுகள் முழுக்க இரத்தத்தோடு என் கையில் அகப்பட்ட பறவையின் துடிப்பையோ காண நேரும் தருணங்கள், வேட்டையாடுவதையே நிறுத்தும் அளவிற்கு வேதனையடையவே செய்யும்.

எதிர்பார்த்ததை விட முன்னதாக அந்த வருடத்தின் கூதிர்காலம் இலையுதிர் காலம் முடிந்தவுடனே வந்துவிட்டதால், என் மைத்துனன் கெர்ல் டே ரவுலே அவனுடைய சதுப்புநில வேட்டைக்கு துணையாக என்னை அழைத்திருந்தான். சிவந்த மயிர்கற்றைகள் நெற்றியில் ஆடும், தாடி வைத்த, தடித்தவனான அவன் நாட்டுபுறத்தில் வசிக்கும் ஒரு கனவான். பிரெஞ்சுக்காரர்களுக்கே உரிய, எப்போதும் பேச்சில் சிரிப்பினை வரவழைக்கும் உற்சாகம் நிரம்பி வழியும் அவனிடம். சில சமயங்களில் முரடனாக தெரிவான் இருப்பினும், விருந்தினர்கள் சிடுமூஞ்சினராக அமைந்தாலும் உபரசரிப்பதில் நல்ல பண்பாளன்.

இருபுறமும் அகன்ற பசுமையான பள்ளத்தாக்கிற்கு நடுவே, ஒரு அழகான நதியின் கரையில் அமைந்திருக்கிறது அவனது பண்ணைவீடு. நெடுங்காலமாக வளர்ந்து உயர்ந்து நிற்கும் மரக்கூட்டங்களை அதன் இருபுறங்களிலும் கொண்ட மலைக்கு அருகே அமைந்திருந்த அந்த வீட்டை பெருந்தோட்டத்தின் நடுவே உள்ள பசுமை குடில் என்று கூட சொல்லலாம். பிரான்ஸில் வேறெங்குமே இல்லாத வேட்டைக்குரிய காட்டுக்கோழிகள் அந்த பிரதேசத்தில் மட்டுமே அதிகமாக காணக்கிடைக்கும். கழுகுகளும் அவ்வப்போது வேட்டையாடப்படுவதுண்டு. மக்கள் நெருக்கடி மிகுந்த நகரங்களில் என்றுமே காண முடியாத, நாடு விட்டு நாடு பறக்கும் பறவை கூட்டங்களும், அவைகள் இரவில் இளைப்பாற வளர்ந்திருக்கும் பசுமையான கருவாலிமரகூட்டங்களும், வழியெங்கும் நிறைந்து, அங்கு மனித வாசனையே படாத இடம் உள்ளே இருக்கிறது என்று முன்னறிவிக்கும்.

அந்த பள்ளத்தாக்கை தாண்டினால், புதர்களால் வேலி அமைக்கப்பட்டு, சிறு நீர்பள்ளங்கள் மூலம் தண்ணீர் விடப்பட்டு வளர்க்கப்பட்ட புல்வெளி மைதானம் உள்ளது. அதை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கும் நதியின் மறுகரைக்கு அப்பால் ஒரு நீண்ட சதுப்பு நிலம் விரியும். கர்ல் தனது சிரத்தையான உழைப்பினால் பசுமை மாறாமல் பராமரித்த அந்த சதுப்பு நிலமே, நான் பார்த்த்திலே மிகச்சிறந்த வேட்டையாடும் இடம். சரசரக்கும் கோரைப்புற்களுக்கு குறுக்கும் நெடுக்குமாக வெட்டப்பட்ட அமைதியான நீர் ஓடைகளும், அதில் மூங்கில் கம்புகளே துடுப்பாக கொண்டு செலுத்தப்பட்ட அடிதட்டையான சிறிய படகுகளின் வரிசையும் அமைந்திருந்தன . நீரோடைக்குள் துள்ளி விளையாடும் மீன்கள் ஆங்காங்கே நாணற்புற்களுக்குள் அடைக்கலம் புக, அந்த மீன்களை விரட்டி விளையாட காட்டுக்கோழிகள் சிறகுகள் படபடக்க தாழ பறக்கும்.

நீர்நிலைகளை காண்பது என்றுமே எனக்கு பரவசமூட்டும் செயல், அதிலும் முக்கியமாக அடங்காமல் ஆர்ப்பரிக்கும் பரந்த கடலை கண்டு லயிப்பது எனது முதன்மையான பொழுதுபோக்கு . மாறாக ஆறு, தன் இருப்பில் பேரழகாக தோன்றினாலும், அந்த நிலையில்லாத ஓட்டம் ஏனோ என் மனதின் ஓரத்தில் வெறுமையையே நிரப்பும். இவையிரண்டையும் விட எண்ணிலடங்கா பெயரறியாத உயிர்களை தன்னுள் பொதித்து துடித்துகொண்டிருக்கும் சதுப்பு நிலமே என் முதல் விருப்பம். விசித்திரமான சப்தங்கள், தனக்கான தாவர வர்க்கங்களுடன் ஏதோ மர்மமான புதிர்போன்ற தனித்த உலகமாக இயங்குகிறது. சேற்று குழம்புகள் நிரம்பிய சதுப்பு நிலம் போன்ற அலாதியான, தவிப்பு நிறைந்த, சில தருணங்களில் அச்சமூட்டும் இடம் வேறு எதுவுமில்லை. நீரால் சூழப்பட்ட இந்த தாழ்ந்த நிலம் மீது ஏன் அச்சம் எப்போதும் அழுத்தியபடி இருக்கிறது? புற்களின் சரசரக்கும் ஒலியா? நம் ஆழத்து நரம்புகளை கூச செய்யும் பூச்சிகளின் குறுகுறுக்கும் ஓசையா? நிலவில்லா இரவில் வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்று அறிய முடியாத புகைபோன்ற ஒளிப்பிரவாகமா? அதன் மீது எப்போதும் கவிழ தயாராக தொங்கிக் கொண்டிருக்கும் பனி என்னும் போர்வையா? பரம ரகசியத்தை கொண்டிருக்கும் பெயரறியாத ஒரு தூரத்து தேசத்தை போன்ற நிசப்தமா அல்லது அதை அவ்வப்போது கலைத்துவிடும் இடியா? ஒருவேளை இந்த மர்ம்மான, ஈரமான, தேங்கிய சேற்று தண்ணீருடன் சூரிய கிரணங்கள் சந்தித்த ஏதோ ஒரு தருணமே ஆதி முதல் உயிரின் தொடக்கமாக இருந்திருக்குமோ?

கர்ல் அழைத்த அன்று மாலையே நான் அவன் இல்லத்திற்கு வந்து சேர்ந்தேன். அந்த ஊருக்கு வரும் வழியேங்கும் சதைகளின் ஊடே சென்று எலும்புகளை இரண்டாக வெட்டுவது போல குளிரடித்த்து.

நாங்கள் அன்று இரவு உணவு அருந்திய விசாலமான அறையில் பஞ்சால் நிரப்ப்பட்டு ஆணிஅடிக்கப்பட்டு கிளைகளில் பாடம் செய்யப்பட்ட பறவைகளின் மாதிருயுருக்கள் பொருத்தப்பட்டிருந்தது. பலவிதமான பருந்து, கருடன், நாரை, ஆந்தை, பக்கி, வல்லூறு, ராஜாளி, கழுகுகள் அச்சமூட்டும் வித்த்தில் அறையின் ஒரு பக்கசுவர் முழுவதிலும், மேற்கூரையிலும் நிரம்பியிருந்தன. விசித்திரமான மூக்குடன், சிறகுகள் விரிந்தது போன்ற சீல்தோலினாலான ஆடை அணிந்து அறைக்குள் நுழைந்த கர்ல் கூட அந்த பறவைக்கூட்டத்தின் ஒருவன் போல எனக்குதோன்றினான்.

வேட்டையான உகந்த இடத்தை தேர்ந்தெடுக்க, முதலில் அங்கிருந்த ஒரு மேட்டுநிலத்திற்கு சென்று நோட்டமிடுவதுதான் திட்டம். அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்து நான்கரை மணிக்குள் அங்கு சென்றுசேர முடிவு செய்திருந்தோம். அந்த மலைமுகட்டில் ஏற்கனவே பனிக்கட்டிகளால் கட்டப்பட்ட ஒரு குடில் நாங்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த்து. விடியற்காலை பனிக்காற்று, ரம்பத்தை கொண்டு சதையை அறுப்பது போல, விஷ ஊசியினால் தசையில் குத்துவது போல, பிட்டங்களை கொள்ளிக்கட்டையால் வருடுவது போல, குறடு கொண்டு நகசதையை திருகுவது போல, வீசுப்போகிறது, அதிலிருந்து நாங்கள் தப்பித்து ஒதுங்குவதற்கான மறைவிடம் அங்கு அது ஒன்றுதான்.

உள்ளங்கைகளை அழுத்தமாக தேய்த்தபடி “இந்த அளவிற்கு குளிரை நான் இதற்கு முன்னர் பார்த்த்தே இல்லை, இன்று மாலை 6 மணிக்கே பூஜ்ஜியத்திற்கு கீழே 12 டிகிரி சென்றுவிடட்து” என்றான் கர்ல்.

இரவு உணவு முடிந்த உடனேயே, கணப்பு தொட்டியின் தீக்கனலை பார்த்துக் கொண்டே, படுக்கைக்குள் என்னை பொருத்திக்கொண்டு உறங்கிவிட்டேன். சரியாக மூன்றரை மணிக்கு கர்ல் என்னை எழுப்பினான். குளிருக்கு நான் ஆட்டுதோலாலான மேலாடையும் அவன் கரடித்தோலாலான மேலாடையும் அணிந்து தயாரானோம். ஆளுக்கு ஒரு குவளை கொடுஞ்சூடான தேநீரை விழுங்கினோம். போதுமான அளவு பிராந்தியை புட்டியில் நிரப்பிக்கொண்டு, உதவிக்கு ஒரு வேலையாளும், எங்கள் வேட்டை நாய்கள் பியாரெட், பிளாஞ்சியனும் சூழ புறப்பட்டோம்.

கதவைத் திறந்து வெளியே வந்த முதல் நொடியிலேயே, குளிர் எலும்பு மஞ்ஞைக்குள் ஊடுறுவி ஜில்லிட்ட்து. வெட்ட வெளி சலனமில்லாமல் உறைந்து போயிருந்தது. நேற்றிரவு மொத்த பூமியும் குளிரால் மாண்டு போனது போலும். தாவரங்கள், பூச்சிகள், மரங்கள் மீது , குளிர் கொஞ்சம் கொஞ்சமாக படர்ந்து குத்திட்டு நின்று, உலர்த்தி தின்றுகொண்டிருந்த்து. கிளைகளிலிருந்து தவறி விழும் சிறிய பறவை தரையைத் தொடும்முன் குளிரில் விறைத்து கல் போல விழும் என எனக்கு தோன்றியது.

நான்காவது ஜாமத்தின் கடும் பனிபொழிவு, சிமிட்டவும் கூட சக்தியில்லாமல் வானத்தில் நிலவை முடக்கியது போலும். தேய்பிறையின் கடைசி நாட்களில் ஒன்றான அன்று பிறைச்சந்திரன் துயர்மிகு ஒளியை உதிர்த்தவாறு மெல்ல தயங்கி வானத்தில் சரிந்து கொண்டிருந்தது.

பனிக்காற்று எங்களை பின்னோக்கி தள்ள, துப்பாக்கிகளை கக்கத்தில் இறுக வைத்துக்கொண்டு, முன்கைகள் முழுவதும் பேண்ட் பாக்கேட்டில் நுழைத்து, நானும் கர்லும் இணையாக நடந்து சென்றோம். உறைந்த நதியின் பனிபரப்பின் மீது நடக்கையில் வழுக்காமல் இருக்க, பூட்ஸ்களை கம்பளித்துணியால் கட்டியிருந்தோம். அது ஓசை எதுவும் எழுப்பவில்லை. நாய்கள் சிகரெட் புகைபோல வெள்ளை புகை எழுப்பி மூச்சு வாங்கி ஓடி வந்தன.

விரைவிலேயே அந்த சதுப்பு நிலத்திற்கு கூட்டி செல்லும் ஒற்றையடிப்பாதைக்கு வந்து சேர்ந்தோம். அந்த புதர்செடிகள் சூழ்ந்த பாதை வழி நுழைந்தோம். கவிந்திருந்த ரிப்பன் வடிவ இலைகள் எங்கள் முழங்கைகளை உரசி,’சவுக்’ ‘சவுக்’ என ஒலியெழுப்பி காதுக்கு பின்னால் மீண்டன. பாதை ஒரு சிறிய மேட்டில் சென்று முடிந்தது. அதன் மீது ஏறி, நான் கண்ட காட்சி, யாரோ என் முகுளத்தில் சுத்தி கொண்டு ஓங்கி அடித்தது போல இருந்தது. பனி! பனி ! எங்கும் உறைபனி, அந்த சதுப்புநிலம் முழுவதையும் மரணப்பனி அழுத்தியிருந்தது, சுற்றியிருந்த தாவரங்களை அந்த வெள்ளைப்பேய் கொன்று புதைந்து கொண்டிருந்தது.

சற்று தள்ளி இருந்த சிறிய மேட்டுநிலத்தில் பனிக்கட்டியால் கட்டப்பட்ட குடிலை கண்டுகொண்டோம். அதிகாலை பறவைகளின் ஓசை எங்களை எழுப்பும்வரை அங்கு ஓய்வெடுக்க முடிவுசெய்து உள்ளே நுழைந்தோம். கதகதப்பிற்கு இரண்டு அடுக்கு கம்பளிபோர்வையை சுற்றி போர்த்தி படுத்தேன். கண்ணயரத் தொடங்குவது போல இருந்தது. புரண்டு படுத்தேன். பனிவீட்டின் ஒளிபுகும் சுவர்வழியே நான்கு வெள்ளிக் கொம்புகளுடன் மங்கிய பால் நிறத்தில் உருமாறியிருந்த நிலா தெரிந்தது. சதுப்பு நிலத்தை உறைய வைத்த பனி, அசராமல் சுவர் வழியாகவும், தரை வழியாகவும் ஊடுறுவி என் கால்களை தொட்டு, என் தொண்டை வழியாக உச்சந்தலைக்கு சென்று ஜில்லிட்டது. கடுமையாக இருமினேன்.

பதட்டமடைந்த கர்ல் ”வேட்டையாட ஒரு பறவை, மிருகம் கூட கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. நீ குளிர் காய தீ மூட்ட போகிறேன். ” என்றான். வேலையாளை அனுப்பி சுள்ளிகளை பொறுக்கி வரச் சொன்னான்.

அந்த பனிவீட்டின் மேற்கூரையின் நடுவில் புகை செல்ல ஒரு துளை இருந்தது. கீழே சுள்ளிகளை குவித்து வைத்து தீ மூட்டினோம். படிக நிற சுவர்களில் செந்நிற தீக்கனல்கள் பட்ட நொடியில், உழைக்கும் உடலில் இருந்து வியர்வை வழிவது போல, சுவர் ஓரங்கள் சன்னமாக உருகியது. புதையல் கண்டறிந்தவன் குரலில், கர்ல் “இங்கே வா! வெளியே வந்து பார்!” என்றான். கூம்பு வடிவத்தில் இருந்த அந்த குடில், உறைந்த போன நீரோடையின் மீது, திடீரென முளைத்த மாபெரும் வைரம் போல இருந்தது. குடிலின் உள்ளே குளிர் காய்ந்து கொண்டிருந்த இரு நாய்களின் நிழல்கள்களால், பட்டை தீட்டப்பட்டு நடுவே அழகிய வடிவம் செதுக்கப்பட்ட வைரமாக ஜொலித்தது.

அதிகாலை அரைமயக்கத்தில் என் முகத்திற்கு நேர்மேலே மொழியில்லாத விநோதமான குழுப்பாடல் பாடக் கேட்டு எழுந்தேன். புகைபோக்கி துளை வழியாக ஒரு பறவைக்கூட்டம், ’ட ’ வடிவத்தில் கடந்து சென்றது. கீழ்வானிலிருந்து புள்ளி பொல தொடங்கி, அம்பு போல வந்து, கூக்குரலெழுப்பி எனது துயில் கலைத்து, சாம்பல் நிற மேல்வானத்திற்கு சென்றடையும் அந்த பறவைக்கூட்டதைப் போல உற்சாகத்தை பொங்க செய்யும் காட்சி எனக்கு வேறெதுவுமில்லை. அது, கதிரவனின் முதல்கீற்று பட பனிஉருக தொடங்கும் அந்த வேளையில், பூமியின் ஆன்மா கொள்ளும் பெருமூச்சின் சாயல் தான் போலும்.

”தீயை அணைத்து விடு, விடியப் போகிறது” என்றான் கர்ல்.

வானத்தில் வெண்மை மெதுவாக வடியத் தொடங்கியது. தத்தி தத்தி வந்த ஒரு வாத்துக்கூட்டம் எங்களை கடந்து சென்றது. துடைத்து எடுத்தது போல இருந்த வானத்தில் ஒளிக்கதிர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து நிரம்பின. திடீரென ஒரு வெடிச்சத்தம், இரண்டு நாய்களும் அதை நோக்கி ஓடின. கர்ல்தான் துப்பாக்கியால் சுட்டான்.

அடுத்து இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை,புதர்மறைவிலிருந்து பறவைக்கூட்டங்கள் எழுந்து வானில் வந்தவுடன் துப்பாக்கியின் வெடிச்சத்தம் கேட்டது. நானும் சுட ஆரம்பித்தேன். பியாரெட்டும், பிளாஞ்சியானும் முச்சிரைத்தபடி இரத்தம் கசியும் பறவைகளை களிப்புடன் கவ்விக் கொண்டு வந்து போட்டன. குவிக்கப்பட பறவைகளில் சில பறவைகள் பாதி கண்களால் என்னை உற்று பார்ப்பது போல தோன்றியது.

சூரியன் வெளிவந்துவிட்டது, துல்லியமான நீல நிறம் வானை நிறைத்த நாள் அது. நாங்கள் வேட்டை முடிந்து கிளம்பலாம் என எத்தனித்த வேளையில், கழுத்து நீண்ட இரு பறவைகள் சிறகுகளை விரித்து எங்களுக்கு தலைக்கு மேலே வெகு அருகே கடந்து போனது. நான் அனிச்சையாக அதை நோக்கி சுட்டேன். அதில் ஒன்று என் காலுக்கு அருகிலேயே வந்து விழுந்தது. அது வெள்ளி நிற மார்பும், சாம்பல் நிற உடலும் கொண்ட ஒரு வகையான வாத்து இனத்தை சேர்ந்த கிளுவை பறவை. அந்த பறவை விழுந்த சில நொடியில், வானத்தையே வெட்டியது போல ஒரு அலறல். மனதை திருக்கும் ஒர் அறுபடாத புலம்பல் போல தொடர்ந்தது. இரண்டு பறவைகளில் ஒன்று திரும்பி வந்து எனது கையில் இறந்து போயிருந்த அதன் இணையை பார்த்து துடித்தது.

தரையில் மண்டியிட்டு கவனித்த கர்ல் “நீ ஒரு பெண்வாத்தை கொன்று விட்டாய், அதன் இணை ஆண்வாத்து பறந்து தப்பிக்க பார்க்காது” என்றான்.

ஆம், அது தப்பிக்கவில்லை. எங்களை சுற்றி வட்டமடித்து கொண்டே, அழுவது போல குரலெழுப்பியது. அந்த குரல் வானத்தில் தொலைத்த தனது துணைக்காக பெரும் வலியுடன் கூடிய ஒரு தேடல் போலவும், எங்களை நோக்கிய ஆற்றாமையுடன் கூடிய மன்றாடல் போலவும் என் காதில் ஒலித்தது.

அங்குமிங்கும் நிலைகொல்லாமல் பறந்த அந்த வாத்தை நோக்கி கர்ல் துப்பாக்கியால் குறி பார்த்தான். தனது இணையை விட்டு அது பறந்து செல்ல போகிறதோ என நினைத்த, மறுகணம் அது திரும்பி எங்களை நோக்கி நேராக பறந்து வந்தது.

”அவளை கீழே போடு. அவன் அருகில் வருவான் பார்!” என்றான் கர்ல். உயிர்கொல்லும் ஆபத்தை கூட உணரும் நிலையில் இல்லாமல், நான் கொன்ற பெண்ணின் மீதான காதலின் கயிறு அந்த ஆண்வாத்தை இழுத்தது.

கர்ல் சுட்டான். அந்த ஆண்வாத்தையும் எங்களையும் சேர்த்திருந்த நூல் அறுந்தது போல, புதர்கூட்டத்தில் விழுந்தது. பியாரெட் கொண்டு வந்து அதை எங்கள் காலடியில் போட்டது.

ஏற்கனவே பறவைகளை சேகரித்த பையில் அந்த இரண்டு பறவைகளையும் ஒரு சேர வைத்தேன். அன்று மாலையே பாரீஸ்க்கு திரும்பி விட்டேன்.

<முற்றும்>