Thursday, April 21, 2011

மூன்று கேள்விகள் - லெவ் தல்ஸ்தோய்

மூன்று கேள்விகள

    முன்னொரு காலத்தில் ஒரு மன்னனுக்கு, தன் எல்லா செயல்களையும் துவங்குவதற்கான சரியான நேரத்தை கண்டறிய வேண்டுமென தோன்றியது. எந்தவிதமான மக்களின் ஆலோசனையை கேட்பது, எவர் எவர்களை தவிர்ப்பது, இவைகளை விட முக்கியமாக, மேற்கொள்ளும் எந்த ஒரு செயலையும் தோல்வியடையாமல் முடிப்பதற்கு, அந்தந்த நேரத்தில் இன்றியமையாது எதனை செய்ய வேண்டும் என கண்டறிய நினைத்தான்.

   இந்த யோசனை தோன்றிய பிறகு, அவனது நாடு முழுவதும், எவர் ஒருவர் தனக்கு அவரின் செயல்கள் துவங்க சரியான நேரம், அதை செய்ய எந்த விதமான மக்களின் தேவையும் அருகாமையும் தவிர்க்க கூடாது, எது மிகவும் இன்றிமையாத செயல் என சொல்கிறார்களோ அவர்களுக்கு தக்க வெகுமதி வழங்கப்படும் என அறிவித்தான். உடனடியாக கல்வியில் சிறந்தோர் சிலர் அரசரை காண வந்தனர். அவர்கள் எல்லோரும் அரசனின் கேள்விகளுக்கு வெவ்வேறு பதில்களைத் தந்தனர்.

முதல் கேள்விக்கு பதிலாக சிலர், செயல்களை துவங்குவதற்கு சரியான நேரத்தை அறிய, முன்கூட்டியே திட்டமிட்டு எவ்வளவு நாட்கள், மாதங்கள், வருடங்கள் ஆகும் எனப் பட்டியல் தயார் செய்து, அந்த அட்டவணைப்படி செயலை துவங்கினால் கண்டிப்பாக சரியான நேரத்தில் முடிக்க முடியும் என்றார்கள். மேலும் சிலரோ முன்கூட்டியே சரியான துவங்கும் நேரத்தை முடிவு செய்வது இயலாத காரியம், அதற்கு மாற்றாக செயல்களை செய்யும்போது வீணாக கழியும் நேரங்களில் தன்னை மறக்காமல், எப்போதும் சுற்றி நடப்பவைகளை உற்று கவனித்து வருவாரேயானால், அந்தந்த நேரத்தின் மிகவும் இன்றியமையாத செயலை செய்ய முடியும் என்றனர். ஆனால் வேறு சிலரோ, மன்னர் எவ்வளவுதான் கவனமாக சுற்றி நடப்பவைகளை அவதானித்தாலும், அவர் ஒருவரால் மட்டும் செயல்களை தொடங்க சரியான நேரத்தை முடிவு செய்வது முடியாத காரியம். இதற்காக அவர் அறிஞர்கள் நிறைந்த ஒரு குழுவை அமைத்து, அவர்களின் உதவியுடன் எல்லாவற்றையும் தொடங்க சரியான நேரத்தை தீர்மானிக்கலாம் என்றனர்.

இதற்கு அடுத்து வந்த வேறு சிலரோ, சில விடங்கள் இந்த குழுமத்தை அமைக்கும் வரை காத்திருக்க முடியாது, அவைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமா, வேண்டாமா என முடிவெடுக்க வேண்டும் என்றனர். அப்படி முடிவெடுக்க, முன்கூட்டியே, அதை செய்தால் என்ன நடக்கும் என தெரிய வேண்டும். அதனை கணித்து தெரிவிக்க சரியானவர்கள் மந்திரவாதிகளே. எல்லா செயல்களை துவங்க சரியான நேரத்தை அறிந்து கொள்ள மந்திரவாதிகளிடம்தான் ஆலோசிக்க வேண்டும் என்றனர்.

இதே போல இரண்டாவது கேள்விக்கும் பல்வேறுவிதமான பதில்கள் கிடைத்தது. சிலர் மன்னருக்கு மிகவும் தேவையானவர்கள , ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் எனவும், சிலர் அரசகுருமார்கள் எனவும், சிலர் வைத்தியா்கள் எனவும், மேலும் சிலர் போர்வீரர்களே மிகவும் தேவையானவர்கள் என சொன்னார்கள். மூன்றாவது கேள்வியான எல்லா காலத்திலும் இன்றியமையாத செயல் என்ன என்ற கேள்விக்கு, சிலர் அறிவியல் ஆராய்ச்சியே எக்காலத்திலும் இன்றியமையாதது எனவும், சிலர் பாதுகாப்பிற்கான போர் நடவடிக்கைகளே எனவும், மீதமுள்ளவர்கள் கடவுளை வணங்கும் ஆன்மீக செயல்தான் எனவும் ஆலோசனை சொன்னார்கள்.

இதுவரை வந்த எந்தவிதமான பதிலையும் மன்னனால் ஒப்புக்கொள்ள முடியவில்லை, அதனால் யாருக்கும் வெகுமதி வழங்கப்படவில்லை. இருந்தாலும் தன்னுடைய கேள்விக்கு சரியான பதிலை அறிய விரும்பினான். அந்த ஊரில் பரவலாக அறியப்பட்ட, தன் ஞானத்தால் புகழ்பெற்றிருந்த துறவி ஒருவரை சந்தித்து அவரின் ஆலோசனையை கேட்க முடிவு செய்தான்.

அந்த துறவி ஊருக்கு வெளியே ஒரு சிறிய குடிசை அமைத்து அதில் வாழ்ந்து வந்திருந்தார். அவர் எப்போதும் சாதாரண மக்ககளை மட்டுமே சந்தித்து ஆலோசனை கூறி வந்தார். அதனால் மன்னன் சாமானியனைப் போல உடையணிந்து கொண்டான். அவரின் குடிசைக்கு சற்று தொலைவிலேயே தன் குதிரையை நிற்க வைத்து, தனது மெய்க்காப்பாளனையும் அங்கேயே காத்திருக்குமாறு கூறியபின், துறவியைக் காண அவன் மட்டும் தனியே குடிசைக்குச் சென்றான்.

மன்னன் அங்கு சென்ற போது, அந்த துறவி அவரது குடிசைக்கு முன்னால் ஒரு சிறிய குழியை தோண்டிக் கொண்டு இருந்தார். சாதாரண உடையில் இருந்த மன்னரைப் பார்த்ததும், வரவேற்று முகமன் செய்து , மீண்டும் குழியை வெட்ட ஆரம்பித்தார். அவர் உடல் நலிவடைந்தும், பலவீனமாகவும் இருந்ததால், ஒவ்வொரு முறை மண்வெட்டியை வெட்டும் போதும், தரையில் சிறிய அளவே தோண்ட முடிந்தது. பலமாக மூச்சிரைக்க அந்த பணியை செய்து கொண்டு இருந்தார்.

மன்னன் அவரை அணுகி,வணக்கம் கூறிய பிறகு “ துறவியே, நான் உங்களிடம் என்னுடைய சந்தேகத்தை தீர்க்க, மூன்று கேள்விகளுக்கான சரியான பதிலை எதிர்பார்த்து வந்துள்ளேன். அவை, என் எந்தவொரு செயலையும் செய்ய சரியான நேரத்தை எப்படி கண்டறிய வேண்டும்? எந்த மாதிரியான மக்கள் மிகவும் அவசியமானவர்கள், அதாவது எவரின் ஆலோசனையை மற்றவர்களை காட்டிலும் கவனமாக கேட்க வேண்டும்? எந்த செயல் மிகவும் இன்றியமையாதது , மிகுந்த கவனத்துடன் எக்காலத்திலும் செய்ய வேண்டியது எது? ”

மன்னரின் கேள்விகளை கேட்ட துறவி, பதிலேதும் சொல்லவில்லை. தன் உள்ளங்கையில் எச்சிலை தடவி, இலகுவாக்கி மீண்டும் மண்வெட்டியால் தோண்ட ஆரம்பித்தார்.

”நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள். மண்வெட்டியை என்னிடம் கொடுங்கள், நான் உங்களுக்காக சிறிது நேரம் வேலை செய்கிறேன்” என்றான் மன்னன்.

“நன்றி!!” எனக் கூறிய துறவி, மண்வெட்டியை மன்னனிடம் கொடுத்துவிட்டு, இளைப்பாற தரையில் அமர்ந்தார்.

சிறிது நேரம் குழி தோண்டிய பிறகு, அதை நிறுத்தி விட்டு துறவியிடம் மீண்டும் அதே கேள்விகளைக் கேட்டான். அதற்கும் பதிலேதும் சொல்லாத துறவி, எழுந்து வந்து மன்னனிடம் கையை நீட்டி மண்வெட்டியை பெற அணுகினார்,

“சரி, இப்போது நீ சிறிது நேரம் இளைப்பாறு, நான் வெட்டுகிறேன்” என்றார்.

ஆனால் மன்னன் மண்வெட்டியை அவரிடம் கொடுக்காமல், தானே மறுபடி தோண்டினான். சில மணி நேரம் கழித்து, சூரியன் மரங்களுக்கு பின்னால் மறைய தொடங்கியது. கடைசியில் பொறுமையிழந்த மன்னன், மண்வெட்டியை தரையில் ஓங்கி குத்தி நிற்க வைத்துவிட்டு துறவியிடம்,


“ அறிஞரே, நான் உங்களிடம் என் கேள்விகளுக்கான பதிலை எதிர்பார்த்து வந்தேன். நீங்கள் பதில் கூற விரும்பவில்லை எனில் , தெளிவாக கூறவும். நான் திரும்பிச் செல்கிறேன் . ” என்றான் மன்னன். அப்போது,

“அங்கே பார்!! யாரோ இங்கு ஓடி வருகிறார், வா, யாரென்று பார்போம்” என்றார் துறவி.

மன்னர் துறவி காட்டிய பக்கம் திரும்பினார். அங்கு குடிசைக்கு பின்னால் இருந்த தோப்பிலிருந்து தாடி வைத்த ஒருவன் ஓடி வருவதை கண்டார். அந்த மனிதன் தன்னுடைய வயிற்றை கையால் இறுக்கமாக பிடித்திருந்தான், அதிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. அவர்கள் நெருங்குவதற்கு முன், அவன் பலவீனமாக முனகியபடி தரையில் மயங்கி விழுந்தான். மன்னனும் துறவியும் சேர்ந்து அவனின் உடைகளை சிறிது தளர்த்தி, அவன் வயிற்றின் நடுவிலிருந்த ஆழமான காயத்தை கவனித்தார்கள். மன்னன் முடிந்த அளவு அந்த காயத்தை நீரால் கழுவி, துறவி தந்த துணி மற்றும் தன்னுடைய கைக்குட்டையால் இறுக்கமாக கட்டு போட்டார். இருப்பினும் இரத்தம் வெளியேறுவது நிற்கவில்லை. இரத்தத்தால் நனைந்த அந்த துணியை எடுத்து, நீரால் கழுவி இரத்தப் போக்கு நிற்கும் வரை மீண்டும் மீண்டும் காயத்தில் கட்டுபோட்டார். அவனுக்கு நினைவு திரும்பியதும், மன்னன் குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுத்தார். இதற்கிடையில் இரவு வந்ததால், மன்னன் துறவியின் உதவியுடன் காயம்பட்ட அந்த மனிதனை குடிசைக்கு தூக்கி சென்று படுக்கையில் படுக்க வைத்தனர். அந்த மனிதன் சிறிது நேரம் கண்ணயர்ந்தான். அந்த குடிசைக்கு நடந்து வந்ததாலும், துறவிக்கு தான் செய்த உதவியாலும் களைப்படைந்த மன்னன் , குடிசையில் உட்கார்ந்தவாரே அன்று இரவு முழுவதும் ஆழ்ந்து தூங்கினான். மறு நாள் காலையில் எழுந்த மன்னன், தான் எங்கிருக்கிறோம் என்பதை உணரும் முன், படுக்கையில் இருந்த அந்த காயம்பட்ட மனிதன் ஒளிரும் கண்களால் தன்னை உற்று காண்பதை குழப்பத்துடன் பார்த்தார்.

“என்னை மன்னித்து விடுங்கள்!!” அந்த தாடி வைத்த மனிதன் உடைந்த குரலில், மன்னனை பார்த்து சொன்னான்.

“யாரப்பா நீ? இதற்கு முன் உன்னை எனக்கு தெரியாதே!!, நான் ஏன் உன்னை மன்னிக்க வேண்டும்?” என கேட்டான் மன்னன்.

“என்னை உங்களுக்கு தெரியாது, ஆனால் உங்களை எனக்கு தெரியும். என் சகோதரனை கொன்று அவனது சொத்துக்களை அபகரித்ததற்காக, உங்களை கொல்ல சபதம் போட்டு வந்தவன் நான். நீங்கள் இந்த துறவியை சந்திக்க தனியாக வருவது எனக்கு தெரிய வந்தது, நீங்கள் திரும்பும் வழியிலேயே உங்களை கொல்ல நாள் முழுக்க நான் காத்திருந்தேன். ஆனால் நீண்ட நேரம் கழித்தும் நீங்கள் திரும்பாததால் என் மறைவிடத்திலிருந்து உங்களை தேடி வெளியே வந்தேன். அப்போது உங்கள் மெய்க்காப்பாளன் என்னை அடையாளங்கண்டு வாளால் குத்தினான். அவனிடமிருந்து தப்பி ஓடும் வழியில்தான் நீங்கள் என்னை காப்பாற்றினீர்கள். நீங்கள் மட்டும் என் காயத்திற்கு கட்டுப் போட்டிருக்காவிட்டால் இந்நேரம் செத்துப் போயிருந்திருப்பேன். உங்களை கொல்ல வந்த, என் உயிரையே காப்பாற்றி விட்டீர்கள். இனி என் வாழ்நாள் முழுக்க உங்கள் உண்மையுள்ள சேவகனாகவே வாழ்வேன். என்னுடைய வாரிசுகளும் அவ்வாறே சேவகம் செய்ய வைப்பேன். என்னை மன்னித்து விடுங்கள்... ”

மன்னன் ஒரு எதிரியோடு சமாதானமானதோடு மட்டுமில்லாமல், விசுவாசமான ஒரு நண்பனை அடைந்தது கண்டு மகிழ்ச்சியடைந்தார். அவனை அப்போதே மன்னித்து, உடனே அரண்மனை வைத்தியர்களை வரவழைத்து அவனுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வேனென்றும், அந்த சொத்துக்களையும் அவனுக்கே திருப்பித் தரப்படும் என்றும் உறுதியளித்தார்.

பிறகு அவனிடமிருந்து விடைபெற்று, துறவியைத் தேடி குடிசைக்கு வெளியே வாசலுக்கு வந்தார். அங்கு துறவி முழங்காலிட்டு, மன்னன் நேற்று தோண்டிய குழியில், சில விதைகளை விதைத்துக் கொண்டிருந்தார். அங்கிருந்து கிளம்புவதற்கு முன்னால் தான் முன்னர் கேட்ட கேள்விகளுக்கான பதில்களை மீண்டுமொருமுறை கேட்க நினைத்து துறவியை அணுகி

”ஞானியே, எனது கேள்விகளுக்கான பதிலை தருமாறு, கடைசியாக ஒரு முறை, தாழ்மையுடன் கேட்கிறேன். ” என்றான்

“உனக்குதான் ஏற்கனவே விடை கிடைத்துவிட்டதே!!!” முழங்காலிலிருந்து எழுந்து ஆசுவாசமாக உட்கார்ந்து, தன் முன்னால் நின்று கொண்டிருந்த மன்னனைப் பார்த்து கூறினார்.

“கிடைத்து விட்டதா? எப்படி? ” என்று கேட்டான் மன்னன்.

“இன்னுமா புரியவில்லை உனக்கு....” என பதில் சொன்ன துறவி, “ நீ என் மீது பரிதாபப்பட்டு இந்த குழியை எனக்காக தோண்டாமல் , உடனே திரும்பியிருப்பாயேயானால் இந்த தாடி வைத்த மனிதனால் தாக்கப்பட்டிருந்திருப்பாய். நேற்று இரவு என்னுடன் தங்காதற்காக வருத்தப்பட்டிருந்திருப்பாய். நீ நேற்று எனக்காக குழி தோண்டிய நேரமே மிகவும் முக்கியமான நேரம், நானே நீ தவிர்க்க முடியாத அந்த முக்கியமான நபர். எனக்கு நல்லது செய்வதே அப்போது நீ செய்ய வேண்டிய இன்றிமையாத செயல். அந்த காயம்பட்ட மனிதன் மயங்கிய போது, அப்போது அவனை கவனித்தாயே, அதுவே நீ செய்ய வேண்டிய முக்கியமான செயல். நீ அவனுடைய காயத்திற்கு கட்டு போட்டிருக்காவிட்டால், உன்னுடன் சமாதானமாக போகாமல் இறந்திருப்பான். அப்போது அவனே மிக முக்கியமான நபர். அப்போது அவனை காப்பாற்றியதே , நீ செய்ய வேண்டிய முக்கியமான செயல்..

இப்பொழுதே- எப்போதும் சரியான முக்கியமான நேரம், ஏனென்றால் எந்த ஒரு செயலும் செய்ய நமது ஆற்றல் முழுமையாக இருப்பது அப்பொழுதுதான். அப்போது நீ யாருடன் இருக்கிறாயோ அந்த நபர்தான் மிகவும் முக்கியமான நபர். உன்னைத் தவிர வேறு யாரையும் சார்ந்திருக்கிறானா என யாருக்கும் தெரியாது. அவனுக்கு நல்லது செய்வதே முக்கியமான இன்றியமையாத செயல், அந்த ஒரு காரணத்திற்காகத்தான் மனிதன் பூமிக்கு அனுப்பப்படிருக்கிறான்.”
<முற்றும்>

No comments:

Post a Comment